Description
புத்தகக் குறிப்பு :
தமிழிலக்கியத்தில் “பறை” என்ற சொல்லைக் கடந்து போகிற போது, “பறை” இசையின் ஈடுபாட்டுக்குப் பிறகு, நான் மெல்ல அதிர்வதுண்டு. இப்பொழுது வளர்மதியின் “பறை” நூலைப் படித்த பிறகு அதிர்வுகளின் நீளம் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
முனைவர் வளர்மதியின் “பறை” பற்றிய இந்த ஆய்வு நூல், தமிழிசை பற்றிய ஆய்வு வரிசையில், ஒரு சிறப்பிடம் பெறும் என்று நம்புகிறேன். தமிழ்ச் சமுதாயத்தின் கலை வரலாறு பற்றிய புரிதலில், ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்றும் கருதுகிறேன். தமிழர்களின் திணை சார்ந்த பண்பாட்டு வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பெற்ற பறை, காலப் போக்கில் எப்படி இழிந்து போனது என்பதைப் புரிந்துகொள்ள இந்நூல் பேரளவுக்கு உதவும்.
– மக்கள் கவிஞர் இன்குலாப்
ஆசிரியர் குறிப்பு:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு க. முத்து – செல்லம்மாள் இணையர்களுக்கு மகளாகப் பிறந்தவர் மு. வளர்மதி. வழக்குரைஞரான அண்ணா. நாகரத்தினம் அவர்களை மணந்த இவருக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியலில் பட்டயம் பெற்ற இவர், முனைவர் பட்டமும் அந்நிறுவனத்திலேயே பெற்று, இணைப் பேராசிரியராக பணியாற்றினார். ‘மொழிபெயர்ப்புக் கலை’, ‘மானுட விடுதலை’ (இங்கர்சால் மொழிபெயர்ப்பு) ஆகிய இரு நூல்களை முதல் வெளியீடுகளாகக் கொண்டு வந்தார்.
தந்தை ‘பெரியார் சிந்தனைகள்’. ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ (தொகுதி 1, 2) ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்’. ‘அன்னை நாகம்மையாரும் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாளும்’, ‘பறை – இசைக்கருவி ஓர் ஆய்வு’. ‘இங்கர்சால் சிந்தனைகள்’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக, பெண் விடுதலை மற்றும் திராவிட இயக்கம் தொடர்பான முப்பதிற்கும் மேற்பட்ட இவரது கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. ‘தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள்’, ‘அறிஞர்கள் பார்வையில் அறிஞர் அண்ணா’, ‘அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’. ‘வெ.நா. அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்’, ‘நானும் என் கவிதையும்’ உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின், தற்போது பணி நிறைவு பெற்று சேலத்தில் வசித்து வருகிறார்.
Reviews
There are no reviews yet.