Description
ஆசிரியர் குறிப்பு
தர்மினி இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். உள்நாட்டுப் போரின் காரணமாக அகதியாக பிரான்சில் குடியேறி தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். ‘சாவுகளால் பிரபலமான ஊர்’, ‘இருள் மிதக்கும் பொய்கை’, ‘அயலாள் தர்மினி’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
புத்தகக் குறிப்பு
தேச எல்லைகள், யுத்தம், நிறவெறி என்பன ஊடுருவிய அகதி மனதின் அகப்பாடல் வடிவம் தர்மினியுடையது. ஆனால், புகலிட வாழ்வுக்கென்று எழுதி வைத்திருக்கும் பரிதாப அபலை கதையாடல் நியதியை மறுத்து, அந்த வாழ்வில் சாத்தியமாகக்கூடிய சுவாரசிய அசுவாரசியங்களை அவர் பதிவு செய்கிறார்.
ஆண்களுக்கென்றே ஆகி வந்திருக்கும் அந்நியமாதல் விசாரம் இங்கே அன்றாடத்தின் பரப்பில், குடும்ப நிறுவனத்துக்குள், இலக்கிய நண்பர்களுக்குள், முகநூல் தொடர்புகளுக்குள், சக நகரவாசிகளோடு நடாத்தப்படுகிறது. ஆனால், இதன் விளைவாக அவநம்பிக்கையையோ மானுட வெறுப்பையோ தர்மினி வந்தடைவதில்லை. மாறாக, அபத்த தரிசனத்தை மீறிக் காதலையும் கனவையும் திளைப்பையும், அவற்றைச் சாத்தியமாக்கும் கவிதை எழுத்தையும், தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஏதோ ஒரு தவிப்பால் அவர் உந்தப்படுவதை வாசிக்கிறோம். மிக அடிப்படையான இந்த மானுட எத்தனத்தை அகம்கொள்ளும் இக்கவிதைகள் அந்நியத்தின் தொலைதூரத்தைக் கடக்க எத்தனிப்பவை.
– ஹரி இராசலட்சுமி
Reviews
There are no reviews yet.