Description
ஆசிரியர் குறிப்பு
பெண்ணியம் மற்றும் கல்வித்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர் சாலை செல்வம். பெண்களுக்கான கூட்டு செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். சுட்டும் விழிச்சுடர், தமிழகப் பெண்கள் ஒருங்கிணைப்பு, ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம், சாவித்திரிபாய் பூலே பெண்கள் பயணக்குழு ஆகிய தளங்களில் பெண்கள் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்திச் செயல்படுபவர்.
பெண்ணிய வாசிப்பிற்கான இவரது எழுத்துப் பணிகளோடு, கூழாங்கல் குழந்தைகள் நூலகத்தின் மூலம் குழந்தைகளுக்கான வாசிப்பு, எழுத்து என இவரது செயல்பாடுகள் பல்வேறு தளங்களில் தொடர்கிறது. இவர் எழுதிய நூல்கள் சிறார் இலக்கியத்தில் குறிப்பிட்ட பங்கு வகித்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக பணியாற்றும் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
நூல் குறிப்பு
கேன்சர் பற்றிய ஒரு புத்தகம் எப்படி இருக்கலாம்? தன் பயங்களை, வலியை, மீண்ட விதத்தை கழிவிரக்கத்தோடு அல்லது தைரியமூட்டும் வகையில் இருக்கலாம். கேன்சர் பற்றிய அறிவியல் மற்றும் அனுபவப்பூர்வமான தகவல்களை, பரிவுமிக்க ஆலோசனைகளை முன் வைக்கலாம். அதையும் கடந்து ஒரு மானுடவியலாளரின் மருத்துவ அனுபவமாக விரிகிறது.
செல்வத்தின் கேன்சர் புத்தகத்தை நீங்கள் படிக்கும் பொழுது அந்த எழுத்து நடையை வியக்கலாம். அவரது நுணுக்கமான விவரிப்புகளை ரசிக்கலாம். அவர் மீது உங்கள் அன்பு பெருகலாம். ஆனால் செல்வத்தின் பாடுகளை நினைத்து அழ மட்டும் முடியாது. ஏனென்றால் தன் உடல் மற்றும் உள்ளத்தின் பாதிப்புகளைக் கூர்ந்து கவனிப்பதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, ஒரு பார்வையாளராக இதை எழுதியிருக்கிறார்.
மருத்துவக் குறிப்புகளை வாசித்தல் என்ற தலைப்பின் கீழ் தன் கேன்சர் கட்டியை 5 மணி என்று மருத்துவர் சொல்வதை இவ்வாறு விவரிக்கிறார். “அச்சமயம் தாய்மையின், காதலின், அழகின் அடையாளமாக இருந்த மார்பகம் கடிகாரமானது. அதில் 5 மணிக்கான இடம் கட்டியாக மாறியதோடு உயிரை அதனுள் சுமந்து நிற்பதைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை சிரித்துக் கொண்டேன்” என்கிறார்.
Reviews
There are no reviews yet.