Description
நூல் குறிப்பு:
…சரக்கொன்றை பூக்கும் காலங்களில் கல்லெடுத்தான் குளம் மாபெரும் மஞ்சள் சோலை போல மாறியிருக்கும். கொத்துக் கொத்தாய் குலை குலையாய் சரக்கொன்றைகள் பூத்திருக்கும். வேங்கைகளும் சமநேரத்தில் பூப்பதுண்டு. கல்லெடுத்தான் குளத்தில் ஒரு நெருப்பு வாகை மரமும் உண்டு. ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியின் இருபக்கமும் சில கிலோமீட்டர் தொலைவுகளுக்கு ஒரு முறை இளம் ஊதா வண்ணக் குழல் மலர்கள் மலர்வதுண்டு. இதை யாரோ ஒருவர் தனித்து நட்டார் என ஊரார்கள் சொன்னார்கள். சிலர் இது அரசாங்கம் நட்டது என்றார்கள். சிலர் இன்னும் தெளிவாக சிங்களவங்கள் நட்டது என்றார்கள். எதுவாகிலும் இவை யுத்தத்தின் பின் நடப்பட்டவை என்பது மட்டும் உண்மை. அவை மலர்ந்து முழுதாக அவிழும் பொழுது இலைகள் எல்லாம் உதிர்ந்து ஊதாக் குழல் மலர்களால் நிறைந்திருக்கும். அதற்கு என்ன பெயரென்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
யாழ்ப்பாணத்திலும் பிரதான வீதிகள் முழுவதும் புங்கை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இங்கும் இது சிங்களவங்கள் நட்டது. அரசாங்கம் நட்டது என்று சொன்னார்கள். அப்பாவிடம் கேட்டிருந்தால் ‘வல்லாதிக்க சக்திகள்!’ என்றிருப்பார். நான் கேட்கவில்லை. மரங்கள் ஒரு நிலத்தின் துல்லியமான இயற்கையைக் கொண்டவை. யாழ்ப்பாணம் ஒரு செயற்கையான நகரம். வரலாற்றின் தற்செயல்களினால் உண்டான ஒரு பிளாஸ்ட்டிக் நகரம். பல்லாயிரம் இழுவிசைகளில் தூங்கும் ஒரு பனித்துளி நகரம். பனை மரங்களும் தென்னைகளும் அதிகமிருக்கும். வாழைகளும் உண்டு. பயனில்லாத எதுவும் மண்ணில் இருக்கக் கூடாது என நினைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் இல்லை…
ஆசிரியர் குறிப்பு:
கிரிசாந் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி ஊரில் பிறந்தார். யாழ். இலக்கிய குவியம், யாழின் கரங்கள், விதை குழுமம் ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பாட்டில் உள்ள இவர், ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வருகிறார்.
‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ என்ற கவிதைத் தொகுப்பையும், ‘கொடிறோஸ்’ என்ற குறுநாவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.






Reviews
There are no reviews yet.