Description
ஆர்.எஸ்.எஸ்.சின் வன்முகமான சாவர்கரோடு புரட்சியாளர் அம்பேத்கரின் உருவத்தை (கொள்கைகளை அல்ல) இணைத்து வாக்குப் பொறுக்கும் இந்துத்துவ சூழ்ச்சியும் அம்பேத்கரின் ஆளுமையையும் அறிவையும் விடுதலைக் கோட்பாட்டையும் செரிக்க முடியாமல் அவரை திரிக்க முயலும் பார்ப்பனியத்தின் சதியும் பேராபத்தானவை.
வருணாசிர தர்மத்தை சீர்குலைத்த பேராசான் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கியதைப் போன்ற அயோக்கியதனத்தையே இவ்விரு செயல்திட்டங்களும் தம் இலக்காகக் – கொண்டிருக்கின்றன.
ஜாதி நஞ்சை முறிப்பதற்கான ஆய்வின் செம்மாந்த வெளிப்பாடுதான் “ஜாதியை அழித்தொழிக்கும் வழி” நூல். ஜாதியை கொல்ல இந்து மதத்தைக் கொன்றாக வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் ஆய்வின் கரு. ஆனால் இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள அம்பேத்கர் – காந்தி உரையாடலையே இந்நூலின் முதன்மை கருத்தாக திசைத் திருப்பி – இந்துமத எதிர்ப்பை – நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இத்தகைய திரிபுவாதம் தலித் மக்களை இந்துமயமாக்கும் சூழ்ச்சிக்கு பயன்படுமா? அல்லது அம்பேத்கரியலை வளர்த்தெடுக்க பயன்படுமா?
இந்நூல் குறித்து எண்பது ஆண்டுகளாக மயான அமைதி காத்த பார்ப்பன ஆளும் வகுப்பினர், திடீரென்று இதற்கு முன்னுரையும் பொழிப்புரையும் எழுத வேண்டிய தேவையென்ன? அருண்ஷோரி, ஜெயமோகன் வகையறாக்கள் அம்பேத்கரை அவதூறு செய்கிறார்கள் எனில், இடதுசாரி முற்போக்கு முகமூடியுடன் அருந்ததிராய்கள் திரிபுவாதம் செய்கிறார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் அதை வெளியிட அவர்கள் தேர்வு செய்த இடமும் அதை உறுதி செய்கிறது.
இந்துமத எதிர்ப்பைத் தம் வாழ்வியலாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பவுத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்களின் தாய்ப்பாலாக்கிய அம்பேத்கரை திரிபுவாதத்திற்கு உட்படுத்த தலித் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அம்பேத்கர் பவுத்தம் தழுவிய அறுபதாம் ஆண்டுகளில் – இந்நூல் நான்காம் பதிப்பாக வெளி வந்துள்ளது.
Reviews
There are no reviews yet.