Description
நூல் குறிப்பு:
ஷோபாசக்தியிடம், நாவல், சிறுகதைகள் கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதைகள் உண்டு. அவற்றை பெறுவதற்கு தட்டையான தமிழ்த் தேசியத்திற்கும் அப்பாற்பட்ட காதுகளே நமக்கு தேவை.
இனவெறியன் ராஜபக்சேவையும், இந்தியப் பார்ப்பனியத்தையும் போன்றே விடுதலைக்கோரும் நாமும், சாதியொழிப்பு, பெண்கள் விடுதலை, சிறுபான்மையினர் பிரச்சினை, மாற்றுப்பால் நிலையினர், எல்லாப் போர்களிலும் சூறையாடப்படும் குழந்தைகள், இன்னும் வகைப்பாடுகளின் மாதிரி வெளிச்சங்களுக்குள் வராத மனிதக் கதையாடல்கள் சனநாயக உரையாடல்கள் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு எந்த விடுதலையையும் பெற முடியாது.
அப்படியான உரையாடல்களை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தி வருபவர் ஷோபா. அவரது எழுத்தில் வந்து போகும் வெவ்வேறு புலங்களின் மனிதர்களைப் போன்றே வெவ்வேறு விடுதலை சித்தாந்தங்களை முன் வைத்து இயங்கும் மனிதர்களோடும் இதழ்களின் நடத்திய உரையாடல்களின் பல்வேறு கால மனநிலை சார்ந்த விவாதங்களை வாசகர்கள் உணரவும், இப்பிரதிக்கு அப்பால், இன்னொரு உரையாடலை ஏற்படுத்தவும் இயலும்.
ஆசிரியர் குறிப்பு;
ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு வட இலங்கையில் அல்லைப்பிட்டி என்ற தீவகக் கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அகதியாக 1990 இல் தாய்லாந்துக்கும் 1993 இல் பிரான்சுக்கும் புலம் பெயர்ந்தவர்.
சிறுகதை, நாவல், திறனாய்வு, பதிப்பு என இலக்கியத்தில் இயங்கி வரும் இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன.
நடிகராகவும் கதாசிரியராகவும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படம் மற்றும் நாடகங்களில் செயற்படுகிறார். கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமியின் உறுப்பினர்.
Reviews
There are no reviews yet.